முசிறி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தில் யூபிஎஸ் வசதியில்லை மின்தடை நேரத்தில் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதி

தா.பேட்டை, மே 17: முசிறி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தில் மின்தடை ஏற்பட்டால் தொடர்ந்து பணிகள் செய்யும் வகையில் மின் பேட்டரி (யூபிஎஸ்) வசதி இல்லாததால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முசிறி தாலுகா அலுவலக வளாகத்தில் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு வாரிசு சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா, சிட்டா, சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அரசு வழங்கும் பல்வேறு சான்றிதழ்களை இ-சேவை மையத்தில்  அதற்குரிய கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது இ-சேவை மையத்தில் யுபிஎஸ் எனும் மின் பேட்டரி வசதி இல்லாமல் உள்ளது.

 இதுகுறித்து முசிறியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் கூறுகையில், இ-சேவை மையம் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டது. தற்போது அரசு வளாகத்திலேயே அமைந்து இ-சேவை மையத்தில் மின்தடை ஏற்பட்டால் கணினி உள்ளிட்ட இயந்திரங்களை இயக்க முடியால் போகிறது. இதனால் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க பயனாளிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். கூலித்தொழிலாளர்கள் தங்களது வேலைக்கு விடுமுறை கூறிவிட்டு சான்றிதழை விண்ணப்பிக்க வரும்போது மின்தடை ஏற்பட்டால் அவர்களின் அன்றைய நாள் முழுவதும் வீணாகிறது. மின்தடை நேரத்தில் ஊழியர்கள் பணியாற்ற முடியாத நிலை ஏற்படுவதால் கூட்டம் அதிகமாகிறது. மின்சாரம் வந்தவுடன் அனைவருக்கும் சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க நேரம் இருப்பதில்லை. அதனால் பயனாளிகள் மீண்டும் மறுநாள் தங்களது வேலைகளை விட்டுவிட்டு வரும் நிலை ஏற்படுகிறது. எனவே இ-சேவை மையத்திற்கு மின் பேட்டரி வசதி ஏற்படுத்துவதற்கான அறிவுறுத்தலை திருச்சி கலெக்டர் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

Related Stories: