×

திருவாரூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

திருவாரூர், மே 17: திருவாரூரில்  தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு நேற்று நெடுஞ்சாலை துறையினர் மூலம் அகற்றப்பட்டது. திருவாரூர் பகுதியில் கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வரும் நிலையில் தங்களது கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் பலரும் தினந்தோறும் மனுக்கள் அளிப்பதற்காகவும்  வருகின்றனர். இதுமட்டுமன்றி இந்த பகுதியில் எஸ்பி அலுவலகம், தாலுகா போலீஸ் ஸ்டேஷன், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் போன்ற அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இந்த பகுதியில் இயங்கி வருகிறது. இதுமட்டுமின்றி தற்போது இந்த பகுதியை ஒட்டியவாறு திருவாரூரில் புதிய பேருந்து நிலையமும் திறக்கப்பட்டுள்ளதால்  இந்த பகுதி மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அதற்கேற்ப சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது.


இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் சேவை சங்கத்தினர் உட்பட பலரும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்துள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கலெக்டர் ஆனந்த் நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் ஆகியோர் தலைமையில் நேற்று நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு இந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையான தஞ்சை சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையான மன்னார்குடி சாலை ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றினர்.

Tags : Tiruvarur ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...