கமல்ஹாசனை பகிரங்கமாக மிரட்டிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மநீம நிர்வாகி போலீஸ் கமிஷனரிடம் புகார்

மதுரை, மே 17: மக்கள் நீதி மய்யம் மதுரை மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர். இவர் நேற்று போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் அளித்த புகார் மனு: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் மதுரை தொகுதி வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன். கடந்த 12ம் தேதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கரூர் மாவட்டம் அவரக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி அண்ணாநகரில் தேர்தல் பிரசாரத்தின் போது, பொதுமக்களிடையே யாருடைய மனதும் புண்படாத வகையில் முழுமையாகவும், விளக்கமாகவும், சாதாரணமாகவும் அவருடைய கருத்தை பேசினார்.

அதற்கு யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால் கடந்த 13ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலின் போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கமல்ஹாசன் பரப்புரையை முழுமையாக கேட்காமல் கண்ணியக் குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கு கெடுக்கும் வகையிலும், பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

கமல்ஹாசனின் ‘நாக்கை அறுக்க வேண்டும்’ என்று தனது பதிலை பகிரங்கமாக பதிவு செய்துள்ளார். அமைச்சரின் பேட்டி வரம்பு மீறி உள்ளது.  அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் உள்ளது. எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்செயல்களுக்காக வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: