வாடிப்பட்டி அருகே தொழிற்சாலைக்குள் புகுந்த 4 அடி இருதலை மணியன்

வாடிப்பட்டி, மே 17: வாடிப்பட்டி அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு செல்லும் சாலையில் மாடு மற்றும் கோழி தீவனம் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பணியாளர்கள் மாட்டுதீவனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்குமூட்டைகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் சுமார் 4 அடி நீளமுள்ள அரியவகை இருதலைமணியன் பாம்பு இருப்பதை கண்டனர். பின் அதை தொழிலாளர்களே பிடித்து  பாதுகாப்பாக சாக்கு பைக்குள் அடைத்து வைத்தனர்.

சோழவந்தான் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் ஆலை நிர்வாகி திருமுருகன் மற்றும் பணியாளர்கள் இருதலை மணியன் பாம்பை ஒப்படைத்தனர். பாம்பை பெற்ற வனத்துறையினர் குலசேகரன்கோட்டை அருகே கோம்பைக்கரடு சிறுமலை வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே இந்த தொழிற்சாலைக்குள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருதலைமணியன் பாம்பு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: