கும்பகோணம் பகுதியில் முன்னறிவிப்பில்லாத மின்தடையால் தொழில் பட்டறைகள் இயங்கவில்லை தொழிலாளர்கள் வணிகர்கள் பாதிப்பு

கும்பகோணம், மே 17: கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடையால் தொழில் பட்டறைகளை இயக்க முடியவில்லை. இதனால் தொழிலாளர்கள், வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் அடுத்த அண்ணலக்கிரஹாரம், அரியத்திடல் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 30க்கும் மேற்பட்ட சில்வர் பாத்திரம் தயாரிக்கும் பட்டறை, வாகன பழுதுபார்க்கும் பட்டறை, மருத்துவமனைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினம்தோறும் பகலில் அறிவிக்கப்படாமல் 5 முறையும், இரவு நேரங்களிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் பட்டறைகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள 1000க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மின்சாரத்துறை அலுவலரிடம் கேட்டால், போதியளவு மின்சாரம் வராததால் இருக்கும் மின்சாரத்தை நிறுத்தி வழங்க சொல்லியுள்ளனர். இன்னும் சில நாட்களுக்குமேல் தொடர்ந்து மின்சாரம் வருமா என்பது சந்தேகமாக உள்ளது என்று பதில் கூறுகிறார்கள். எனவே அறிவிக்கப்படாத மின்வெட்டை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து மின்தடை ஏற்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: