மெலட்டூர், சுரைக்காயூரில் புயலால் வேரோடு விழுந்த தேக்கு மரங்கள் கடத்தல் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

கும்பகோணம், மே 17:  கஜா புயலின் தாக்கத்தால் மெலட்டூர், சுரைக்காயூரில் வேரோடு சாய்ந்து விழுந்த தேக்கு மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் அதிகாலையில் கரையை கடந்தது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. இதேபோல் வெட்டாற்றின் கரையி–்ல் உள்ள தஞ்சை மாவட்டம் மெலட்டூர், சுரைக்காயூர் உள்ளிட்ட கிராமங்களில் தேக்கு மரங்களும் விழுந்தது. புயல் தாக்கி 6 மாதமாகியும் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை சிலர் வெட்டி கடத்தி செல்கின்றனர். மேலும் ஆற்றின் கரையோரங்கள் பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தில் இருப்பதால் அவர்களும்  கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். எனவே மெலட்டூர், சுரைக்காயூர் பகுதி வெட்டாற்றின் கரையில் கஜா புயலின்போது சாய்ந்துள்ள தேக்கு மரங்கள் கடத்தப்படுவதை தடுத்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமென வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலரான மெலட்டூ–்ர் கதிரேசன் கூறுகையில், ஆற்றின் கரைகளை பலப்படுத்தவும், காடுகளை உருவாக்கவும் பல ஆண்டுகளுக்கு முன் தேக்கு மரங்கள் நட்டு வைக்கப்பட்டது. சமீபத்தில் மரங்கள் நன்கு வளர்ந்திருந்தது. இந்நிலையில் கஜா புயலின்போது கரையோரங்களில் உள்ள பெரும்பாலான மரங்கள் அடியோடும், முறிந்தும் விழுந்து விட்டது. மரங்கள் விழுந்து 6 மாதங்களாக நிலையில் தற்போது சாய்ந்துள்ள மரங்களை மர்மநபர்கள் திருடி சென்று வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகத்துக்கும், வனத்துறைக்கும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகளை நட வேண்டுமென விழிப்புணர்வு செய்து வந்தாலும் மாவட்ட நிர்வாகமே இருக்கும் மரங்களை காப்பாற்றாமல் உள்ளது. எனவே கஜா புயலின்போது சாய்ந்துள்ள தேக்கு மரங்களை மீட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும் அல்லது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: