தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பை ஆக்கிரமித்த செடி, கொடிகள் விஷ ஜந்துக்களால் பொதுமக்கள் அச்சம்

தஞ்சை, மே 17:  தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சுற்றிலும் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் வீட்டுக்குள் புகும் விஷஜந்துக்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பில் மண்டியுள்ள முட்செடிகள் மற்றும் புதர்களால் பாம்புகள் படையெடுத்து வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களும் குடியிருந்து வருகின்றனர். 2 மற்றும் 3 மாடி கட்டிடங்களாக இருந்தாலும் தரைதளத்தில் வீடுகளுக்கு முன்பும், பின்பும் புதர் மண்டி கிடக்கிறது. முட்செடிகள் முளைத்து யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு வளர்ந்து உயர்ந்து நிற்கின்றன. இத்துடன் அந்தந்த வீடுகளிலிருந்து வெளியேற கூடிய கழிவுநீர் புதர் மண்டி கிடக்கும் இடங்களில் தேங்கி நிற்கிறது. மேலும் குடியிருப்பு மாடிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து தினமும் தண்ணீர் வழிந்து முட்செடிகளில் கொட்டுவதால் அங்கு கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் அவ்வபோது புதர்மண்டி கிடக்கும் செடிகளில் இருந்து வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் குடியிருப்போர் தினமும் அச்சத்துடன் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கட்டிடங்கள் மற்றும் கட்டிடங்களை சுற்றியுள்ள பகுதிகளை பராமரித்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய வீட்டுவசதி வாரிய நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அவலநிலை குறித்து அவ்வபோது பொதுமக்கள் தகவல் தெரிவித்தாலும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. இதுகுறிதது மாநகராட்சி நிர்வாகமும் கவலைப்படுவதில்லையென குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் முட்புதர்களை அகற்றியும், சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: