கடந்த 5 ஆண்டுகளில் மண் வளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் கண்டறிய மாதிரிகள் சேகரிப்பு

வெள்ளகோவில், மே 17:   கடந்த 5 ஆண்டுகளில் மண் வளத்தில்  மாறுபாட்டை கண்டறிய வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நவீன முறையில் மண் மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கி.சுமதி கூறியவதாவது: வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள 17 வருவாய் கிராமங்களிலும் மொத்தம் 272 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மண்மாதிரிகள் சேகரிப்பு பணி தொடங்கி உள்ளது. நடப்பு ஆண்டில் மண் மாதிரிகள் சேகரிக்கும் முறையில் தமிழக அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மண் வளத்தில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், ஏற்கனவே வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் உர பரிந்துரைகளை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் செய்வதற்காகவும், புது அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வெள்ளகோவில் வட்டாரத்தில்  உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் தலா 10 இடங்களில் பரவலாக துல்லியமான முறையில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் சத்துக்களை அறிய ஆய்வகத்திற்கு அனுப்படுகின்றன.

இவை தவிர ஒவ்வொரு கிராமத்திலும் அறிவியல் ரீதியாக அட்சரேகை அடிப்படையில் மூன்று இடங்கள் மண் மாதிரி எடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் மூலம் செயற்கைகோளுடன் இணைப்பை ஏற்படுத்தி தேர்வு செய்யப்பட்ட இடங்கள் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த நிலத்தில் 50 செ.மீ.,  ஆழத்திற்கு சதுர வடிவில் குழிகள் வெட்டப்படுகின்றன. அதில் 25 செ.மீ., ஆழம் வரை ஒரு மண்மாதிரியும், 25 செ.மீ முதல் 50 செ.மீ., வரை மேலும் ஒரு மண்மாதிரியும், தனித்தனியாக சேகரம் செய்யப்படுகின்றன. அதனுடன் இணைக்கப்பட்ட விவரப்படிவத்தில் மண்ணின் நிறம், மண் வகை, கடினத் தன்மை அந்தப் பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. எடுக்கப்பட்ட மண் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யும் போது அதனுடன் இணைந்த பல்வேறு பண்புகளும், சுற்றுச் சூழலும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. அதன் படி கிராம வாரியாக மண்வளம் கணக்கீடு செய்யப்பட்டு உரப் பரிந்துறைகளிலும் தேவையான மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: