இளம்பெண்ணை மானபங்கம் செய்த சகோதரர்களை கைது செய்வதில் அலட்சியம்

கெங்கவல்லி, மே 17:  வீரகனூரில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த அரசு ஊழியர் மற்றும் அவரது தம்பியை போலீசார் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார். கெங்கவல்லி தாலுகா, வீரகனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன்(30). இவர் அந்தியூர் கன்சல்டிங் கம்பெனியில் பணியாற்றி   வருகிறார். இவரது மனைவி  மாதேஸ்வரி(25). இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர் வையாபுரி மகன்  அங்கமுத்து(47). இவர் கெங்கவல்லி மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி  வருகிறார்.  

Advertising
Advertising

இவரது தம்பி செந்தில்குமார்(41). இவர்களது வீட்டிற்கு இடையே  3 அடியில் பொது வழித்தடம் உள்ளது. அந்த வழித்தடத்தில் அங்கமுத்து கழிப்பறை  கட்டி வருகிறார். கழிப்பறை கட்ட தோண்டிய குழியில், தற்போது மழைநீர்  தேங்கியுள்ளதால், மாதேஸ்வரி வீட்டின் சுவரில் ஓதம் காணப்பட்டது.  இதுகுறித்து அங்கமுத்து மனைவியிடம் மாதேஸ்வரி  கேட்டுள்ளார்.

இந்நிலையில்,  கடந்த 5 தேதி அங்கமுத்து மற்றும் அவரது தம்பி செந்தில்குமார், குடிபோதையில் வந்து வீட்டில் தனியாக இருந்த மாதேஸ்வரியை தகாத  வார்த்தைகளில் திட்டி, சேலை யை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து, செருப்பால்  அடித்துள்ளனர். இதனால் மயங்கி விழுந்த மாதேஸ்வரியை, அக்கம்பக்கத்தினர்  மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய வீரகனூர் போலீசார், கடந்த 8ம் தேதி,  மானபங்கம் மற்றும் கொலை முயற்சி, கெட்ட  வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், அங்கமுத்து, அவரது தம்பி செந்தில்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதுவரை  அவர்களை கைது செய்யவில்லை.

வீரகனூர் காவல் நிலையத்திற்கு  சென்று, மாதேஸ்வரி கேட்ட போது, அங்கமுத்து மற்றும் செந்தில்குமார் ஊரில் இல்லை என போலீசார்  தெரிவித்தனர். ஆனால், அங்கமுத்துவோ கெங்கவல்லி மின்வாரிய அலுவலகத்திற்கு  தினமும் பணிக்கு சென்று வருகிறார். எனவே, அவரை போலீசார் கைது செய்யாவிட்டால், எஸ்பியிடம் நேரில் புகார் தெரிவிக்க உள்ளதாக மாதேஸ்வரி தெரிவித்தார்.

Related Stories: