ஏர்கன் துப்பாக்கி சுட்டதில் சிறுவன் முதுகில் பால்ரஸ் குண்டு பாய்ந்து படுகாயம்

சேலம், மே 17: சேலத்தில், ஏர்கன் துப்பாக்கி சுட்டதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது பால்ரஸ் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் பொன்னம்மாபேட்டை செங்கல்அணை கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திக்(17), பிளஸ்1 படித்துள்ளார். நேற்று அதே பகுதியை சேர்ந்த ஆசைதம்பி எ்ன்பவரது மகன்களான தமிழ்செல்வன், வேலு, வசந்தகுமார் ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வேலு(19) ஏர்கன் துப்பாக்கியை வைத்து விளையாடினார்.

Advertising
Advertising

திடீரென துப்பாக்கி திடீரென வெடித்ததில், அதிலிருந்து வெளியே வந்த பால்ரஸ் குண்டு, அங்கு விளையாடிக்கொண்டிருந்த கார்த்திக்கின் முதுகில் பாய்ந்தது. உடனே முதுகில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதை பார்த்து, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அலறினர். சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள், கார்த்திக்கை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிறுவனின் முதுகில் பாய்ந்த பால்ரஸ் குண்டை அகற்ற, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஏர்கன் துப்பாக்கிக்கு லைசென்ஸ் உள்ளதா என்பது குறித்தும், சிறுவன் கையில் எப்படி துப்பாக்கி சென்றது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: