போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி அதிரடி கைது

சேலம், மே 17: சேலத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி அதிரடியாக கைது செய்யப்பட்டார். சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லதுரை(35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன், இவர் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

 மேலும் வெளிமாநில மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவுடி செல்லதுரை முன்ஜாமீன் பெற்றார். அதே நேரத்தில் அவர் மீது கட்டப்பஞ்சாயத்து, வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டுதல் போன்ற புகார்கள், போலீசுக்கு வந்த வண்ணம் இருந்தன.  

இதையடுத்து செல்லதுரையை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று காலை கிச்சிப்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். மோகன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இவரின் எதிர்தரப்பு ரவுடிகளான ஜீசஸ், சிலம்பரசன் ஆகியோரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: