×

மாவட்டத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் ₹750 கொடுத்து டிராக்டர் தண்ணீர் வாங்கும் மக்கள் கந்திகுப்பம் கிராமத்தில் அவலம்

கிருஷ்ணகிரி, மே 17: கந்திகுப்பம் கிராமத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னையால், ஒரு டிராக்டர் தண்ணீரை ₹750 என விலை கொடுத்து வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பர்கூர் ஒன்றியத்தில் உள்ள கந்திகுப்பம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் தெரு, ஓம்சக்தி கோயில் தெருவில் உள்ள மக்களுக்கு, கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து  வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: எங்கள் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு வரும் மக்களின் பயன்பாட்டிற்காக, கடந்த 2015-16ம் ஆண்டு 14வது நிதிக்குழு மானியம் மூலம் ₹25,500 மதிப்பில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது.

குடிநீர் தொட்டிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய் அமைக்கப்பட்ட நிலையில், தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், பொதுக்குழாய் அமைத்து ஓரிரு நாட்கள் குடிநீர் வழங்கினர். இந்நிலையில், திடீரென பொது குழாய்களும் அகற்றப்பட்டது. இதனால், 2 கி.மீ தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். ஒரு சில நாட்களில் அங்கும் தண்ணீர் வருவதில்லை. இதனால், தற்போது 4 வீடுகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, ஒரு டிராக்டர் தண்ணீர் ₹750 என விலைக்கு வாங்கி பகிர்ந்து பயன்படுத்தி கொள்கிறோம். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக முதியவர்கள், பெண்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வர முடிவதில்லை. எனவே, இப்பகுதியில் பொது குழாய் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியிலும், தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர். அங்கன்வாடிக்கும் தண்ணீர் இல்லை: கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், தற்போது 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதற்கு குடிநீர் வழங்க ஊராட்சி மூலம் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பயன்பாட்டிற்கு வந்த ஒருநாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டு, இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

Tags : village ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...