×

பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வரும் முன்பே பிளஸ் 2 புதிய பாடங்களின் கைடுகள் விற்பனை அமோகம்

நாமக்கல், மே 17:  பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வரும் முன்பே, பிளஸ் 2 புதிய பாடங்களின் கையேடுகள் விற்பனை அமோகமாக உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில், தற்போது கலை மற்றும் அறிவியல் பிரிவில், 24 வகையான பாட புத்தகங்களை, பள்ளிகல்வித்துறை மாணவ, மாணவிகளுக்கு அளித்து வருகிறது.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அச்சிடப்பட்டு, சென்னை, மதுரை போன்ற நகரங்களில் நேற்று முதல் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் படி, எழுதப்பட்ட அனைத்து புத்தகமும், பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு விட்டது. இந்த பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து, தனியார் பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் தொடங்கி விட்டனர்.

ஆனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, பிளஸ் 2 புதிய பாட புத்தகங்கள் இன்னும் போதுமான அளவு வந்து சேரவில்லை. குறிப்பிட்ட ஒருசில பாட புத்தகம் மட்டுமே வந்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் வரும் 3ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புதிய பாட புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில், பாடப்புத்தகங்கள் முழுமையாக கல்வித்துறை அலுவலகங்களுக்கு வருவதற்கு முன்பே, புதிய பாடத்திட்ட கைடுகள் (நோட்ஸ்) அனைத்து பாடங்களுக்கும் தயாரிக்கப்பட்டு விட்டது.

மூன்று தனியார் நிறுவனங்கள் இந்த கைடுகளை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி, கைடு விற்பனையை அந்த நிறுவனங்கள் தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் வாட்ஸ் அப் குழுக்களில், பிளஸ் 2 புதிய பாடத் திட்ட கைடுகள் கிடைக்கும் இடங்கள் குறித்த விவரங்களை, அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். ஆசிரியர்களுக்கு பாட புத்தகங்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடியும், மாணவர்களுக்கு 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை காட்டி விற்பனையை அந்த நிறுவனங்கள் வேகப்படுத்தி வருகிறது.

மாணவ, மாணவியரும் புதிய பாடங்களை பார்க்கக்கூடிய ஆவலில் கைடுகளை ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக, பிளஸ் 2 கணித புத்தகம், இந்த ஆண்டு 2 பகுதியாக வருகிறது.  தற்போது ஒரு பகுதி மட்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஒரு பகுதிக்கு மட்டும் கைடு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. பிளஸ் 2 புதிய பாடத் திட்ட  பாடபுத்தகங்கள் முழுமையான அளவுக்கு கல்வித்துறை அலுவலகங்களுக்கு வருவதற்கு முன்பே கைடுகள் விற்பனைக்கு வந்துள்ளது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

புதிய பாடத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் மூத்த முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர்  எழுதி முடித்தார்கள். கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து பிளஸ் 2 புதிய பாடப் புத்தகம் எழுதும் பணியும் தொடங்கி, டிசம்பரில் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டு, கல்வித்துறை அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கைடுகள் முழுமையான அளவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. புத்தகங்கள் எழுத அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற ஆசிரியர்கள் சிலரே, கைடுகளை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு விட்டு காசு பார்ப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags : school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி