×

மாதா தேர் பவனியில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் மின்வாரிய முதன்மை பொறியாளர் விசாரணை

திருவண்ணாமலை, மே 17: செங்கம் அருகே கிறிஸ்தவ தேவாலய தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, மின்வாரிய முதன்மை பொறியாளர் விசாரணை நடத்தினார். செங்கம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் கடந்த 14ம் தேதி இரவு தூய லூர்துமாதா தேவாலய தேர் பவனி நடந்தது. அப்போது, முத்துவீதி வழியாக மாதா தேர் பவனி வந்த போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்கம்பத்தில் இருந்த மின்வயர் தேர் மீது உரசியது. அதனால், தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது, தேர் அருகே இருந்த ஜெபராஜ், அன்பரசு ஆகியோர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம், விழுப்புரம் மண்டல முதன்மை பொறியாளர் சிவராஜன், திருவண்ணாமலை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் ஆகியோர், அல்லியந்தல் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தேர் மீது மின்வயர் உரசி விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டனர். மின் விபத்து நடந்த முத்துவீதியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேர் பவனிக்கு முறையாக மின்வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டதா, சம்பவம் நடந்த போது மின்வாரிய ஊழியர்கள் அங்கு பணியில் இருந்தனரா, தேர் உயரம், வீதிகளில் உள்ள மின்கம்பங்களின் உயரம் ஆகியவை குறித்து ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டது.


கீழ்பென்னாத்தூர், மே 17: கீழ்பென்னாத்தூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நெடுங்காம்பூண்டி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசனிடம் பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7 மணியளவில், திருவண்ணாமலை - சென்னை நெடுஞ்சாலை, கீழ்பென்னாத்தூர் சந்தைமேடு பகுதியில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி (பொறுப்பு) மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பேரூராட்சி செயல் அலுவலர் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : power engineer ,incident ,death ,persons ,Mata Chatta Bhavan ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...