×

திருவள்ளூர், சென்னை, காஞ்சியில் தண்ணீர் பஞ்சம் காலி குடங்களுடன் சாலை மறியல்

திருத்தணி: திருத்தணி அருகே சிவாடா கிராமத்தில் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கிராம மக்கள் சரமாரி குற்றம்சாட்டுகின்றனர்.  
இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ₹2.50 லட்சம் வழங்கி, பைப் லைன் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிவாடா ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பைப் லைன் அமைக்கப்படாததால் குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் நேற்று காலிக் குடங்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு:  திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஒத்திவாக்கம் ஊராட்சி செல்வி நகரில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் ஊராட்சி செயலாளர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் காலி குடங்களுடன் செங்கல்பட்டு-பொன்விளைந்தகளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பல்லாவரம்:  குன்றத்தூர் அருகே தரப்பாக்கம் பகுதியில் தாம்பரம்-  மதுரவாயல் செல்லும் புறவழிச்சாலையை ஒட்டி அணுகு சாலையில் தனியாருக்கு  சொந்தமான தண்ணீர் கம்பெனிகள்  உள்ளன. இந்நிலையில் நேற்று இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி தரப்பாக்கம் மற்றும் தண்டலம் ஊராட்சி பகுதியை  சேர்ந்த  பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தண்ணீர் கம்பெனியை  மூடக்கோரி முற்றுகையிட்டு, சாலை மறியலில்  ஈடுபட்டனர். மதுராந்தகம்:  மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் கடந்த சில வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீரும்,

ஒருசில பகுதிகளில் 2 நாளைக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து மதுராந்தகம்-சென்னை நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் நுழைவாயில் எதிரே மற்றும் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 8 மணியளவில் பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Tags : Tiruvallur ,road ,Chennai ,Kanchipuram ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு