×

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆந்திரா போலீசை கண்டித்து டிரைவர் தற்கொலை மிரட்டல்

* ஆலமரத்தில் ஏறி ‘அலம்பல்’
* போக்குவரத்து கடும் பாதிப்பு

ஊத்துக்கோட்டை: தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் ஆந்திர போலீசை கண்டித்து, ஊத்துக்கோட்டையில் ஆலமரத்தின் மீது ஏறி லாரி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள  ஊத்துக்கோட்டை   காவல் துறை மற்றும் ஆர்.டி.ஒ செக் போஸ்ட்  அருகில் 100 அடி உயர ஆலமரம் உள்ளது. இந்த மரத்தின் 70 அடி உயரத்தில் நேற்று பகல் 11.30 மணிக்கு ஒருவர் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டினார். தகவலறிந்து ஊத்துக்கோட்டை  டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அவர் கீழே  இறங்க மறுத்ததால் தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அதிகாரி ராஜு தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தார்ப்பாயை கீழே பிடித்தபடி தற்கொலை மிரட்டல் விடுத்தவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த ஆசாமி, ‘‘கலெக்டர் வந்தால் தான் கீழே இறங்குவேன்’’ என கூறினார்.

ஆலமரத்தின் மீது ஏறி ஆசாமி தற்கொலை செய்து கொள்ளப்போகும்  தகவல் காட்டு தீயை போல் பரவியது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் அங்கு கூடினர். இதற்கிடையே அவரை மீட்பதற்காக தீயணைப்பு துறை வீரர் ஒருவர் ராட்சத ஏணியை பயன்படுத்தி மரத்தின் மீது ஏறினார். இதையறிந்த ஆசாமி, ‘‘நீங்கள் மேலே ஏறாதீர்கள். நானே இறங்கி வருகிறேன்’’ என கூறிவிட்டு கீழே இறங்கினார். போலீசார் விசாரணையில் சிவகாசியை சேர்ந்த லாரி டிரைவர் ஆப்ரகாம் (42)  என்பதும், ஆந்திராவில் தன்னை தாக்கியவர்கள் மீது ஆந்திர போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இதையடுத்து ஆப்ரகாமை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் காவல் நிலையம் கொண்டு வந்து, போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் 2 மணிநேரத்துக்கு ஊத்துக்கோட்டையில் பரபரப்பும், சென்னை-திருப்பதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும்  ஏற்பட்டது.

Tags : Andhra ,attackers ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்