துபாய், தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த ரூ76 லட்சம் குங்குமப்பூ, தங்கம் பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்

மீனம்பாக்கம்: துபாய் மற்றும் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ62 லட்சம் குங்குமப்பூ மற்றும் ரூ13.5 லட்சம் தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த சாகுல் அமீது (42) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று, திரும்பி வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். அவரது சூட்கேசில் பாக்கெட், பாக்கெட்டாக ஈரான் நாட்டில் பதப்படுத்தப்பட்ட முதல்தர குங்குமப் பூக்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். மொத்தம் 31 கிலோ குங்குமப் பூக்கள்  இருந்தன. இதன் மதிப்பு ரூ62 லட்சம்.  சுங்க அதிகாரிகள் அந்த குங்குமப்  பூக்களை பறிமுதல் செய்தனர். பின்னர், சாகுல்அமீதை கைது செய்து, இவர் யாருக்காக கடத்தி வந்தார், இவரை கடத்தலுக்கு பயன்படுத்திய ஆசாமி யார் என தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.

இதேபோல், தாய்லாந்து நாட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நண்பகல் 1 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கும்பகோணத்தை சேர்ந்த முகமது பைசல் (33) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் தாய்லாந்து நாட்டிற்கு சென்று, திரும்பி வந்தார். இவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனையிட்டபோது, எதுவும் சிக்கவில்லை. சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று அவரது ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் 400 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு ரூ13.5 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் பயணி முகமது பைசலை கைது செய்தனர். தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: