வங்கி கடனை திரும்ப செலுத்தாத விவகாரம்: 2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

சென்னை: வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் 2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் இயங்கிவரும் தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் அறிஞர் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் அறிஞர் அண்ணா மேனேஜ்மென்ட் கல்லூரி ஆகிய கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள். இந்த அறக்கட்டளை பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளது. ஆனால், கடனை திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிகள் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தன. அதன் அடிப்படையில் அறக்கட்டளையின் சொத்துக்களை ஏலம் விட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேஸ்சிமம் ஆர்க் லிமிடெட் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவில், ஏற்கனவே இந்த அறக்கட்டளை நடத்திய மருத்துவ கல்லூரியில் உள்ள மாணவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். அறக்கட்டளை மீது ‘சர்பாசி’ சட்டத்தின்கீழ் (கடனை திரும்ப வசூலிப்பதற்காக சொத்துக்களை முடக்குவது தொடர்பான சட்டம்) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கல்லூரிகளில் 2019-20ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்தால் அவர்களும் இந்த நீதிமன்றத்தின் கதவை தட்ட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த கல்லூரிகளில் 2019-20ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்க அண்ணா பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: