விதிமீறி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை தண்ணீர் கம்பெனியை பொதுமக்கள் முற்றுகை: குன்றத்தூர் அருகே பரபரப்பு

பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் கம்பெனிகள் அதிகளவில்  உள்ளன. இங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மூலம் சென்னை முழுவதும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், தனியர் விடுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, விதிமீறி தண்ணீரை உறிஞ்சி விற்கும் மேற்கண்ட கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதை கண்டித்து தரப்பாக்கம் மற்றும் தண்டலம் ஊராட்சி பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர், நேற்று அங்குள்ள ஒரு தண்ணீர் கம்பெனியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஹேமாவதி ஆகியோர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, தாசில்தார் உத்தரவுப்படி தண்ணீர் கம்பெனிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘‘தரப்பாக்கம் மற்றும் தண்டலம் ஆகிய  ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. முன்பெல்லாம் எங்கள் பகுதியில் 20 அடி முதல் 30 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்தால் தண்ணீர் கிடைக்கும். தற்போது இந்த சர்வீஸ் சாலையில் 8க்கும் மேற்பட்ட தண்ணீர் கம்பெனிகள் வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதாலும், தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளதாலும், கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கபட்டு தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருவதால், எங்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை. எனவே, இந்த தனியார் தண்ணீர் கம்பெனிகளை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால் எங்களது போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்’’ என்றனர்.

Related Stories: