திருவொற்றியூரில் பாதாள சாக்கடை அடைப்பால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது: தொற்றுநோய் பீதியில் பொதுமக்கள்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வசந்தம் நகரில் பாதாள சாக்கடை அடைப்பால், வீடுகளில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் தொற்றுநோய் பீதியில் தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 12வது  வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக  அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், மேன்ஹோல்கள் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், பல வீடுகளில் உள்ள கழிவறையில் கழிவுநீர் செல்ல முடியாமல் குளம் போல் தேங்கி நிற்பதால் கடும்  துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்குவதால், பலர் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது: குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் வழியாக காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கு செல்கிறது. பின்னர், அங்கிருந்து மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு, மாட்டு மந்தை தெரு அருகே உள்ள பிரதான கழிவுநீரேற்று நிலையத்திற்கு செல்கிறது. காலடிப்பேட்டை கழிவுநீர் உந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் சக்திதிறன் குறைவாக இருப்பதால்ல குடியிருப்புகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீரை விரைவாக உறிஞ்ச முடியாமல் குழாய்களில்  தேங்குகிறது. மேலும், அடைப்பு காரணமாக மேன்ஹோல்கள் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. அதுமட்டுமின்றி, வீடுகளின் கழிவறையில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் குளம்போல் தேங்குகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தால் தற்காலிக நடவடிக்கை மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்துகிறார்களே தவிர இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது இல்லை.

எனவே, கழிவுநீர் உந்து நிலையத்தில் அதிக திறன் கொண்ட ராட்சத மோட்டாரை  பொருத்தவும், பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்த         இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் அதிக சக்தி கொண்ட ராட்சத மோட்டார் புதியதாக இணைத்துள்ளோம். மேலும், தற்போது பிரச்னையாக உள்ள பகுதியில் பல குடியிருப்புகள் தாழ்வாக உள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இருப்பினும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படும்போது அதை சரி செய்வதோடு, அடிக்கடி லாரிகள் மூலம்  கழிவு நீரை அப்புறப்படுத்தி வருகிறோம்,’ என்றனர்.

Related Stories: