முசிறி தாலுகாவில் அரசு அங்கீகாரமின்றி செயல்படும் பயிற்சி மையங்கள் ஆர்டிஓ ஆய்வு செய்ய வலியுறுத்தல்

தா.பேட்டை, மே 16:  முசிறி தாலுகாவில் அரசு அங்கீகாரம் இன்றி செயல்படும் பயிற்சி மையங்களை ஆர்டிஓ ஆய்வு செய்து மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 முசிறி தாலுகாவில் உரிய அரசு அங்கீகாரமில்லாமல் பல்வேறு பெயர்களில் பயிற்சி மையங்கள் நடைபெறுவதாகவும் அவற்றை ஆய்வு செய்து மாணவ, மாணவிகள் படிப்பதற்கு தகுந்த கல்வி மையங்களா என்பதனை ஆய்வு செய்வதோடு அங்கீகாரம் இல்லாத பயிற்சி மையங்களை நடத்துவோர் மீது முசிறி ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 இதுகுறித்து முசிறியை சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், முசிறி தாலுகாவில் அரசு உரிய அங்கீகாரம் இல்லாமல் நர்சிங், கேட்டரிங், லேப்டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மையங்கள் தங்கள் நிறுவனத்தை கல்லூரிகள் என தவறாக விளம்பரம் செய்வதோடு அரசின் உரிய அங்கீகாரம் இல்லாத பயிற்சி வகுப்பிற்கு மாணவ, மாணவிகளை சேர்த்து வருகின்றனர். இது போன்ற அரசு அங்கீகாரம் இல்லாத பயிற்சி மையங்களில் கிராமப்புறத்தை சேர்ந்த பெற்றோர்களிடம்  கல்வி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கின்றனர். மாணவ, மாணவிகள் இது போன்ற அங்கீகாரம் அற்ற கல்வி நிறுவனங்களில் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ படித்து முடித்த பின் அவர்கள் கொடுக்கும் சான்றிழை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது. அரசு வேலைக்கும் செல்ல முடியாது. படிக்கும் அனைவரும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க முடியாது  என்ற போதிலும் உரிய அங்கீகாரம் பெற்று அதற்குரிய பயிற்சியை நடத்தும் தகுதி உள்ளவர்களிடம் சேர்ந்து படித்தால் தனியார் நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பினை பெற்று அதற்குரிய ஊதியத்தினை பெற்று வாழ முடியும். தவறான அங்கீகாரம் இல்லாத பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிலும்போது மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விகுறியாகும் என்பதால் திருச்சி கலெக்டர், முசிறி ஆர்டிஓ, தாலுகாவில் உள்ள பயிற்சி மையங்கள் அரசின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறதா என்பதை உடனடியாக ஆய்வு செய்து அங்கீகாரம் இல்லாமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories: