வீட்டை காலி செய்ய சொன்னதால் மாநகராட்சி ஊழியரின் வீட்டுக்கு தீ வைப்பு

திருச்சி, மே 16: திருச்சி சுப்ரமணியபுரம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். மாநகராட்சி ஊழியர். இவருக்கு சொந்தமான வீடு பொன்மலைப்பட்டி மலையடிவாரத்தில் உள்ளது. இதில் அந்த வீட்டில் இவரின் நான்கு சகோதரிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட நினைத்த சகாயராஜ் 4 சகோதரிகளையும் வீட்டை காலி செய்ய சொன்னார். அவர்கள் மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. 4 பேரை காலி செய்ய சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சகாயராஜ் அவர்களை வீட்டை காலி செய்யும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சகாயராஜின் அக்கா மகன் லோடுமேன் ஜூடு என்ற ரூடல் ஜோசப் பிரான்சிஸ்(40) வீட்டின் முன் இருந்த பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தினார். இதில் பந்தல் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து சகாயராஜ் அளித்த புகாரின்பேரில் பொன்மலை போலீசார் ரூடல் ஜோசப் பிரான்சிசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: