கோட்டக்குப்பத்தில் தீயணைப்பு நிலையம்

காலாப்பட்டு, மே 15: புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியை ஒட்டி பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, இடையன்சாவடி உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இப்பகுதிகளில் அதிகளவில் ஏழை மக்கள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கூரை வீடுகள், ஷீட் போட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அவசரத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதில்லை. கோட்டக்குப்பம் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததே இதற்கு காரணம்.

இப்பகுதிகளில் ஏதாவது தீ விபத்துகள் நடந்தால் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வானூரில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. அவர்கள் வருவதற்குள் வீடுகள் முற்றிலும் எரிந்து, பொருட்கள் நாசமாகி விடுகின்றன. அருகில் உள்ள புதுவை பகுதிக்கு தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தால், அவர்கள் தமிழ்நாடு எல்லைக்குள் நாங்கள் வருவதில்லை என்கிறார்கள்.இதனால் கோட்டக்குப்பம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் சமுதாயக்கூடம் இல்லாததால் ஏழை மக்கள் அதிகளவில் செலவு செய்து தனியார் மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எனவே கோட்டக்குப்பம் பகுதியில் அரசு சார்பில் சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: