பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி, மே 15:  புதுச்சேரி  கல்லூரிகளில் பொறியியல், அறிவியல், உயிரியல் படிப்புகளுக்கு இன்று முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் சேர்மன்  அறிவித்துள்ளார்.இது தொடர்பாக  சென்டாக் சேர்மனும், கல்வித்துறை செயலருமான அன்பரசு சென்டாக் மாணவர் சேர்க்கை கையேட்டை வெளியிட்டு கூறியதாவது: புதுச்சேரியில்  மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், கால்நடை, ஆயுர்வேதம்,  கேட்டரிங் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு முதல் ஒரே குடையின்  கீழ் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இதன்  காரணமாக மாணவர்கள் 100க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு ஒரே  விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். 2019-20ம் ஆண்டுக்கான  சென்டாக் மாணவர் சேர்க்கை இன்று (15ம் தேதி) காலை 9 மணி முதல் 25ம் தேதி  நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும்.

எம்பிபிஎஸ்,  பிடிஎஸ், ஆயுர்வேத மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வு  முடிவுகள் வெளிவந்தவுடன் தனியாக அறிவிக்கப்படும். அதேபோல் பாரதிதாசன்  கல்லூரியில் உள்ள ஒரு சில இடங்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம்  உள்ள 3777 பொறியியல் இடங்கள், 827 உயிரியல் பாடப்பிரிவுகளான இடங்கள், 4923 கலை மற்றும் அறிவியல், வணிகவியல்  இடங்கள், 188 டிப்ளமோ இடங்கள் மற்றும் 648 லேட்ரல் என்ட்ரி இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  மொத்தம் உள்ள 9715 இடங்கள் சென்டாக் தரவரிசை  அடிப்படையில் நிரப்பப்படுகிறது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்  தனித்தனியாக கல்லூரிகளுக்கு அலைய வேண்டியதில்லை. ஆன்லைன் முறையில்  விண்ணப்பிப்பதில் சிலருக்கு குறைபாடுகள் இருக்கலாம். இதற்காக பாரதியார்  பல்கலை கூடம், மதகடிப்பட்டு அரசு கலைக்கல்லூரி, வில்லியனூர் மகளிர்  கல்லூரி, தவளக்குப்பம் அரசு கலைக்கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 72 உயர்நிலைப்  பள்ளிகள், 59 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகத்தில் உள்ள  கணிப்பொறிகளை, விண்ணப்பிப்பதற்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதற்காக அங்கு மாணவர்கள், பெற்ேறார்களுக்கு உதவி செய்ய ஊழியர்கள்  இருப்பார்கள். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.இந்த முறை தமிழ்நாட்டு  பாடநூல் கழகத்தில் இருந்து மதிப்பெண் தரவுகளை சென்டாக் பெற்றுவிட்டதால்,  மதிப்பெண் சான்றிதழை இணைக்க தேவையில்லை. தேர்வு பதிவெண்ணை குறிப்பிட்டால்  மட்டும் போதும். மேலும் குடியிருப்பு, சாதி சான்றுகளுக்காக ஏற்கனவே  மாணவர்களுக்கு நிரந்தர சான்று வழங்கப்பட்டுள்ளது. அதை ஆண்டுதோறும்  புதுப்பிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. புதுப்பிக்கப்படாத  சான்றிதழ் செல்லாது என்ற நிலையில் இந்த முறை இந்த சான்றிதழை  புதுப்பிக்காமல் இருந்தாலும் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.  அதே நேரத்தில் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஜூன் மாதத்துக்குள் சான்றிதழை  புதுப்பித்து சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் குடியிருப்பு  சான்றிதழ் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்ற நிலையை கொண்டு வர  இருக்கிறோம். இதனால் மாணவர்கள், பெற்றோருக்கு வீண் அலைச்சல் குறையும்.

இந்த  ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் அதிக மாணவர்கள்  விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்காக கல்லூரி இடங்களை  அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் அதிகம்  விரும்புகிற பொருளாதாரம், வணிகவியல், கார்ப்பரேட் செக்ரட்ரி உள்ளிட்ட  இடங்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் காலியாக உள்ள  பேராசிரியர் பணியிடங்களை யுபிஎஸ்சி மூலமாக நிரப்புவதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.தற்போது 40 முதல் 50 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக  உள்ளது. ஆன்லைன் முறையில் மாணவர்கள் விண்ணப்பிப்பதன் மூலம் சேர்க்கை  சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள்  நிரம்புகிறது. குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் ஆர்வம்  இல்லாததால் அந்த இடங்கள் நிரம்புவதில்லை. குறிப்பாக பிஏ வரலாறு, சமுகவியல்  ஆகிய பாடங்கள் காலியாக இருப்பதுதான் சில கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள்  நிரம்பாமல் இருக்க காரணம். 25ம் தேதி இரவு 12 மணி வரை  விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். துணை  சேர்மன் பாண்டா, கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு, சென்டாக் கன்வீனர்  மாணிக்தீபன் உள்ளிட்டோர் கையேட்டை பெற்றுக் கொண்டனர்.

Related Stories: