விழுப்புரம் மாவட்டத்தில் 5,241 வாக்குச்சாவடிகள் அமைப்பு

விழுப்புரம்,   மே 15:  உள்ளாட்சித்தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 23ம் தேதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்   தொடர்ச்சியாக 29ம் தேதியன்று அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கான கருத்து   கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து 133   கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை   செய்யப்பட்டு வாக்குச்சாவடி இறுதி பட்டியல் ஆட்சியர் அலுவலகத்தில்   நேற்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட  ஊரக   வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன் பெற்றுக்கொண்டார்.   இதனைத்தொடர்ந்து ஆட்சியர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது   மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 4,690 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற  பகுதிகளில்  215 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 285  வாக்குச்சாவடிகளும் ஆக  மொத்தம் 5,190 வாக்குச்சாவடிகள் அடங்கிய வரைவு  வாக்குச்சாவடி பட்டியல்  கடந்த 23ம் தேதியன்று வெளியிடப்பட்டது.அதன்  பிறகு அனைத்துக்கட்சி  பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை  மனுக்களை அதிகாரிகள்  மூலம் ஆய்வு செய்து எந்தெந்த பகுதிகளில் கூடுதலாக  வாக்குச்சாவடி மையங்களை  அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஊரக பகுதிகளில் 42  வாக்குச்சாவடி மையங்களை கூடுதலாக  சேர்த்து 4,732 வாக்குச்சாவடி மையங்களை  அமைக்கவும், நகராட்சி பகுதிகளில்  10 வாக்குச்சாவடிகளை கூடுதலாக சேர்த்து  225 வாக்குச்சாவடி மையங்களை  அமைக்கவும், பேரூராட்சி பகுதிகளில்  வாக்காளர்களின் எண்ணிக்கை  குறைந்ததன்பேரில் ஒரு வாக்குச்சாவடி மையத்தை  குறைத்து 284 வாக்குச்சாவடி  மையங்களை அமைக்கவும் பட்டியல் தயாராகி அதற்கு  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஊரக, நகர்ப்புற, பேரூராட்சி பகுதிகளில் ஒட்டு மொத்தமாக 5,241 வாக்குச்சாவடி  மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டு வாக்குச்சாவடி  இறுதி பட்டியல்  தற்போது வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 23ம்  தேதியன்று  வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் இருந்து தற்போது  கூடுதலாக  51 வாக்குச்சாவடி மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவற்றில்  4,967 வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வாக்காளர்களும்  வாக்களிக்கும்  வகையிலும், 137 வாக்குச்சாவடிகளில் ஆண்கள் மட்டும், 137   வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டும் வாக்குகளை செலுத்தும் மையங்களாக   அமைக்கப்பட உள்ளது. இந்த 5,241 வாக்குச்சாவடி மையங்களில் 4,773   வாக்குச்சாவடி மையங்கள் அரசு பள்ளிகளிலும், 465 வாக்குச்சாவடி மையங்கள்   தனியார் பள்ளிகளிலும், 3 வாக்குச்சாவடிகள் தற்காலிக கொட்டகையிலும் அமைக்க   நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி இறுதி பட்டியல்   அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும் பொதுமக்கள்,   அரசியல் கட்சியினரின் பார்வைக்காக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, நகராட்சி கமிஷனர் லட்சுமி, பிடிஓ ஜெகதீசன்   உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: