லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் துப்புரவு பணியாளர்கள்

திண்டிவனம், மே 15:  திண்டிவனம் நகராட்சிக்கு தினந்தோறும் குப்பை சேகரிப்பதற்காக பேட்டரியால் ஆன 33 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த 33 வாகனங்களிலும் திண்டிவனம் நகராட்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன  பதிவு எண்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த வாகனங்களை ஓட்டுனர் உரிமம்  இல்லாமல் துப்புரவு பணியாளர்களே ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்  உள்ளது. மேலும் திண்டிவனத்தில் உள்ள 33 வார்டுகளுக்கும் ஒவ்வொரு வாகனம் என  வாங்கப்பட்டுள்ளது. ஆனால் துப்புரவு பணியாளர்கள் இந்த வாகனத்தை தாறுமாறாக ஓட்டுகின்றனர்.

சில துப்புரவு பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் வாகனம் ஓட்ட கற்றுக் கொடுப்பதும், செல்போன் பேசிக்கொண்டே  வாகனம் ஓட்டுவதும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக  நடுரோட்டில் நிறுத்தி பேசிக்கொண்டிருப்பதும், போக்குவரத்து விதிகளை  மீறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் திண்டிவனம் நகர்புற  பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வாகனங்களுக்கு பதிவு எண் இல்லாததால் விபத்து ஏற்படும் பட்சத்தில் எந்த வாகனம் விபத்தை ஏற்படுத்தியது என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே வாகனங்களுக்கு பதிவு  எண், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் ஆகியவை முறையாக இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை  

விடுத்துள்ளனர்.

Related Stories: