×

குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, மே 15:    கள்ளக்குறிச்சி நகராட்சி 6வது வார்டு பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி 6வது வார்டு சக்தி விநாயகர் கோயில் தெரு, வாய்க்கால் மேட்டு தெரு ஆகிய பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி மூலம் குடிநீர் தெரு பைப்லைன் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூட்டு குடிநீர் சரிவர விநியோகம் செய்வது இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18 நாட்களுக்கு முன் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது, எனவே 6வது வார்டு பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்து கொடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரை குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெண்கள் நேற்று சுமார் 11 மணியளவில் காலி குடங்களுடன் கச்சிராயபாளையம் செல்லும் சாலை காந்திரோடு பகுதி சக்திவிநாயகர் கோயில் அருகில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி குடிநீர் பிரச்னை என்றால் நகராட்சி அதிகாரிகளிடம் போய் கேளுங்கள், ஏன் சாலை மறியல் செய்கிறீர்கள் என கூறி பொதுமக்களை மிரட்டினார். அதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யுங்கள் என மற்ற போலீசார்களிடம் எஸ்ஐ கூறினார். இதனால் ஆத்திர
மடைந்த பெண்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் தான் நாங்கள் சாலை மறியல் போராட்டம் செய்கிறோம், கைது செய்வதாக இருந்தால் எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் என கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக பொதுமக்களிடம் சமாதானம் செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உத்தரவாதம் அளித்தனர். அதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கச்சிராயபாளையம் செல்லும் சாலை காந்திரோடு பகுதியில் சுமார் அரை மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Women ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது