குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ₹69.91 கோடியில் 2911 பணிகள்

விழுப்புரம்,  மே 15: விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.69.91  கோடியில் 2911 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் பிரச்னைகள்  இருந்தால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு  கொண்டு புகார் அளிக்கலாம் என ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம்  மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக ஊரக மற்றும்  நகர்புறப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தினசரி தடையின்றி குடிநீர்  வழங்கும் வகையில் ரூ.69.91 கோடி செலவில் 2911 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் வறட்சி காரணமாக பல  இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும், பொதுமக்கள் முறையற்ற  குடிநீர் இணைப்புகள் மூலமாகவும் மற்றும் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம்  தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் நிலையும் பல இடங்களில் காணப்படுகிறது. இதனால் சீரான  குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையை போக்கி அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம்  செய்யும் வகையில் முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டித்திடவும் மற்றும்  சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சும் மின்மோட்டார்களை பறிமுதல் செய்யவும்  சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள்  சட்டவிரோதமாக எடுத்துள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் மின்மோட்டார்களை  தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் குடிநீர்  இணைப்புகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலமாக துண்டிப்பு செய்வதுடன்  மின்மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் குடிநீர் பிரச்னைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்  தெரிவிக்க ஏதுவாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலவச தொலைபேசியுடன்  கூடிய கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கான இலவச தொலைபேசி  எண்கள் 1800 425 3566 மற்றும் 1077 என்ற எண்களை தொடர்பு கொண்டு குடிநீர்  பிரச்னைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: