×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடலூரில் போராட்டம்

கடலூர், மே 15: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் துரை வெளியிட்டுள்ள அறிவிக்கை:கடலூர், நாகை, விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரண்டு பிரிவாக  ஹைட்ரோ கார்பன் எடுக்க சுமார் 274 இடங்களில் ஆழ்துளை கிணறு வெட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் கடலூர் மாவட்டத்தில் 158 கிணறுகள் (கடலூர் மாவட்டம் தியாகவல்லி - நாகை மாவட்டம், சீர்காழி வரையில்) 731 சதுர கிமீ வரை ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், கடலூர் மாவட்டம், பரங்கிபேட்டை - நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கிமீ வரையில் வேதாந்த நிறுவனத்திற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடலூர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் கெடும். சுகாதாரமான குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல், லட்சக்கணக்கான பேர் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. இதனால் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட உரிமத்தை முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தை புதுவை மாநில முதல்வர் எதிர்ப்பது போல், தமிழக முதல்வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வலியுறுத்தி கடலூரில் வரும் ஜூன் 4ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Cuddalore ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை