உசரத்துக்குடியிருப்பில் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால் உயிர்பலி அபாயம்

சாத்தான்குளம், மே 15: உசரத்துக்குடியிருப்பில் இருந்து செட்டிவிளை செல்லும் சாலையோரம் மின்கம்பி அறுந்து விழுந்து  15 நாள்களாகியும் சீரமைக்காததால் உயிர் பலி அபாயம் நிலவுவதாக  கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சிக்குட்பட்ட உசரத்துக்குடியிருப்பில் இருந்து செட்டிவிளை, படுக்கப்பத்து செல்லும் கிராம சாலை உள்ளது. இந்த வழியாக கிராம மக்கள்  பாதசாரியாக மற்றும் இரு சக்கரவாகனம், இதர வாகனங்களில் சென்று திரும்புகின்றனர்.  இந்நிலையில் உசரத்துக்குடியிருப்பில் இருந்து செட்டிவிளை செல்லும் சாலையோரம் ஒரு மின்கம்பத்தில் இருந்து மின்வயர் கம்பி அறுந்து விழுந்து 15 நாள்களாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் தோட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து கிராம மக்கள் படுக்கப்பத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் யாரும் அதனை பார்த்து சீரமைக்க முன்வரவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்து சாலையோரத்தில் காணப்படுவதால் மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடு மற்றும் பாதசாரி, வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே  அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு அறுந்து விழுந்த மின்கம்பிகளை  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: