கோவில்பட்டியில் சுரங்கப்பாதையில் தேங்கிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு

கோவில்பட்டி,மே 15:  கோவில்பட்டி நகரில் பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு லட்சுமி மில் மற்றும் வேலாயுதபுரம் ஆகிய ரயில்வே கேட்டுகளில் ரயில்வே மேம்பாலங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலகோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்த வருகிறது.மேலும் நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள இளையரசனேந்தல் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதை வழியாக அதிகளவில் பேரூந்துகள், ஆட்டோ, வேன், லாரிகள் செல்கின்றன. காந்திநகர், இந்திராநகர், சீனிவாசநகர், நடராஜபுரம் போன்ற பகுதி மக்களுக்கும் இந்த சுரங்கப்பாதை வழியாக சைக்கிள், இருசக்கர வாகனங்களில் நகருக்குள் வந்து செல்கின்றனர்.  இந்நிலையில் மழை காலங்களில் சாலைகள் வழியாக செல்லும் மழைநீர் சுரங்கப்பாதைக்குள் சென்று தேங்கி மினிகுளமாக காட்சியளிக்கும். தற்போது பெய்த மழையிலும் சுரங்கப்பாதைக்குள் மழைநீர் குளமாக தேங்கி நின்றததால் வாகனங்கள்தண்ணீருக்குள் திணறியபடி சென்றன. தற்போது மழை குறைந்து விட்ட நிலையில், இந்த சுரங்கப்பாதைக்குள் ஏற்கனவே தேங்கிய மழைநீரானது கழிவுநீராக மாறிவிட்டது. இந்த கழிவுநீருடன் அருகில் உள்ள குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் கழிவுநீரும் சுரங்கப்பாதைக்குள் கசிவு நீராக சென்று தேங்கி நிற்கின்றன.

Advertising
Advertising

இதனால் இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தி டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை பரவகூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுரங்கப்பாதை வழியாக வாகனங்களில் செல்வோர் மீது கழிவுநீர் வாரி இறைக்கிறது. அப்பகுதி வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அளவில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சுரங்கப்பாதைக்குள் மழைகாலங்களில் தண்ணீர் தேங்க விடாமலும், செப்டிங் டேங்க் கழிவுநீர் கசிவை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் ஆண்டுதோறும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி அவதிப்படுவதை விட, சுரங்கப்பாதையை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

விரைவில் போராட்டம் இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள்

பேரமைப்பின் தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக கூறியதாவது; ‘கோவில்பட்டி இளையரசனேந்தல்ரோடு ரயில்வே கேட்டில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதோடு, நீண்ட நாட்கள் இந்த தண்ணீரானது கழிவுநீராக மாறி விடுகிறது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுநீரும் சுரங்கப்பாதைக்குள் கசிந்து சென்று தேங்கி நிற்கிறது.இதனால் சுரங்கப்பாதை வழியாக வாகனங்களில் செல்வோர் சிரமத்துடன் கடந்து செல்கின்றன. கழிவுநீருடன் செப்டிக் டேங்க் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் வீசுவதால் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது. இதனால் சுரங்கப்பாதைக்கு பதிலாக இந்த ரயில்வே கேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். விரைவில் நிறைவேற்றாத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

Related Stories: