குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்ட மக்கள்

ஓமலூர், மே 15: ஓமலூர் அருகே ஒரு மாதமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் புது நல்லாகவுண்டம்பட்டி, பழைய நல்லாகவுண்டம்பட்டி, செட்டியார்கடை, பச்சாயிகோயில், தட்டாங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு, இதே பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களை கொண்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது கோடையில் கடும் வறட்சி நிலவி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கிணறுகள் மற்றும் ஆள்துளை கிணறுகள் வற்றியது. இதனால் கடந்த ஒரு மாதமாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று ஆனைகவுண்டம்பட்டியில் இருந்து பழையூர் செல்லும் சாலையில், முள்செடிகளை வெட்டிபோட்டு, காலி குடங்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூர் போலீசார், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  கோடைகாலம் முடியும் வரை மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

இதனால் இப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடைப்பாடி:  சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள கொத்தாப்பாளையம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராசிபுரம், இருப்பாலி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கிருக்கும் சிலர், அப்பகுதியில் கோயில் கட்டுவதற்கு கொத்தாப்பாளையம் கூட்டுகுடிநீர் இணைப்பை துண்டித்து, தண்ணீர் எடுத்து வருவதால், கடந்த ஓராண்டாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் வந்து இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இளம்பிள்ளை: சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூராட்சி கேகே நகர், தூதனூர், மாட்டையாமபட்டி, இ. மேட்டுக்காடு ஆகிய பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் இன்றி மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களிடம் பேரூராட்சிகள் இணை இயக்குனர் முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் எனவும், அதுவரை லாரி மற்றும் டிராக்டர்  மூலம் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இடங்கணசாலை பேரூராட்சியில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகான வேண்டும் என பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: