ரயில் நிலையம், தண்டவாளத்தில் குப்பை கொட்டினால் அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை: தண்டவாளம் மற்றும் ரயில் நிலைய வளாகத்தில் குப்பை கொட்டினால் அபராதம் வசூலிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர், தாம்பரம், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஆனால், பல ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் முறையாக இருப்பதில்லை. ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டாலும், பல ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதியில் குப்பை, கழிவுகள் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக, புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம் அருகே வீடுகள் அமைந்திருப்பதால், மேற்கண்ட வீடுகளில் இருந்து பலர் குப்பை, கழிவுகளை தண்டவாள பகுதியில் வீசி வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், ஆவடி ஆகிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  அதேபோல், புறநகர் ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், ரயில் தண்டவாளத்தில் குப்ைப கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது, என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: