ஜார்ஜ் டவுன் வக்கீல்கள் சங்க தேர்தலில் விதிமீற கூடாது: தமிழ்நாடு பார்கவுன்சில் எச்சரிக்கை

சென்னை:  ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த ஏப்ரல் 5ம் தேதி நடக்க இருந்தது. இந்த தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக எம்.ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவர் வக்கீல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் பதிவு மூப்பு இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்புமனுவை நிராகரித்தனர். இதை எதிர்த்து, தமிழ்நாடு பார்கவுன்சிலில் ஆறுமுகம் மனுதாக்கல் செய்தார். அதில், 2010க்கு பிறகு வக்கீலாக பதிவு செய்தவர்களில் தகுதித் தேர்வில் வெற்றிபெறாதவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு பார்கவுன்சில் 2015 செப்டம்பரில் உத்தரவிட்டது. கடந்த 2016 ஜூனில் நடந்த தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். இதனால் என்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவு தானாகவே ரத்தாகிவிட்டது. எனது பதிவு மூப்பும் தொடர்கிறது. எனவே, என்னை தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை தமிழ்நாடு பார்கவுன்சில் பதிவுக்குழு உறுப்பினர்கள் மூத்த வக்கீல் ஆர்.சிங்காரவேலன், வக்கீல் என்.சந்திரசேகர் ஆகியோர் விசாரித்து அளித்த உத்தரவு வருமாறு:மனுதாரர் ஆறுமுகம் தகுதித் தேர்வை எழுதாததால் வக்கீல் தொழில் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால், 9 மாதத்தில் அவர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். எனவே, அவரை தொழில் செய்ய இடைநீக்கம் செய்தது ரத்து செய்யப்படுகிறது. குறுகிய கால இடைவெளிக்குள் அவர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதால் அவரது சங்க பதிவு மூப்பு தொடர்கிறது. எனவே, அவர் ஜார்ஜ் டவுன் வக்கீல்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். விசாரணையின்போது தேர்தல் தேதி ஜூன் 7ம் தேதிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள்  ஜூன் 7ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலில் வாக்களிக்க 422 பேருக்கு தகுதி உள்ளது. எனவே, இறுதி வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கவோ, வாக்காளரை பட்டியலில் இருந்து நீக்கவோ கூடாது. தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். பேனர்கள், போஸ்டர்கள், துண்டுபிரசுரங்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளோ, நீதிமன்றத்தை சுற்றியோ இருக்க கூடாது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மிகவும் பழமையான இந்த சங்கத்தின் தேர்தலை அமைதியாக நடத்தி மற்ற சங்கங்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று நம்புகிறோம். தேர்தல் தொடர்பான அறிக்கையை ஜூன் 8ம் தேதி பார்கவுன்சிலில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: