அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகளாகியும் கிடப்பில் சிடிஎச் சாலை விரிவாக்க பணி: விபத்துகளால் உயிரிழப்பு அதிகரிப்பு

ஆவடி: பாடி முதல் திருநின்றவூர் வரை சிடிஎச் சாலையை விரிவாக்கம் செய்ய, அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டாகியும், இதுவரை பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர்,  திருத்தணி வழியாக திருப்பதி வரை சிடிஎச் சாலை அமைந்துள்ளது. இச்சாலையை சுற்றியுள்ள பகுதியில் பொறியியல், கலை கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், அரசு, தனியார் நிறுவனங்கள்  ஏராளமாக உள்ளன. இதனால், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், பாடி, மண்ணூர்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், திருநின்றவூர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக இச்சாலை குறுகி, காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், திருமுல்லைவாயல் முதல் அம்பத்தூர் வரை கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் மின் வயர் பதிப்பதற்காக தோண்டிய பள்ளம் இதுவரை சீரமைக்காமல் கிடைக்கிறது. இதனால்,  சிறு மழை பெய்தால் கூட அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
Advertising
Advertising

சாலை ஓரங்களில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைக்கு பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வருபவர்கள் சாலை ஓரத்திலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரிப்பதுடன், நெரிசலும் அதிகரித்து வருகிறது. மேலும், அடிக்கடி விபத்தில் சிக்கி பலர் உயிரிழக்கும் அவலம் உள்ளது. எனவே, இந்த சாலையை விரிவுப்படுத்த வேண்டும், என பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ம் ஆண்டு இச்சாலையை பாடி முதல் திருநின்றவூர் வரை 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இன்று வரை சாலை விரிவாக்க பணிகள் தொடங்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனால் ஆண்டுதோறும் சிடிஎச் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி பலியாகி வருவது தொடர்கதையாக உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிடிஎச் சாலையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், நெரிசல் மற்றும் விபத்து அதிகரித்து வருகிறது. திருமுல்லைவாயல் பழைய காவல்  நிலையத்திலிருந்து அம்பத்தூர் தனியார் மருத்துவமனை வரையும்,  ஆவடி,  காமராஜர் சிலை முதல் பட்டாபிராம், நெமிலிச்சேரி மேம்பாலம் வரையும் பல ஆண்டாக மின்விளக்கு இல்லாததால்  இரவு நேரங்களில் மேற்கண்ட பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால், பாதசாரிகள்   வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றனர். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட  சாலையில் 40அடி கன்டெய்னர்  லாரிகள் அதிக அளவில் வருகின்றன. இதனால்,  இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில  நேரங்களில் லாரியில் சிக்கி வாகன ஓட்டிகள்  பலியாகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை விரிவாக்கப் பணிகளை அதிகாரிகள் விரைந்து தொடங்க வேண்டும்,’’ என்றனர்.

அவசர காலங்களில் சிரமம்

பாடி முதல் திருநின்றவூர் வரை  சிடிஎச்  சாலையில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நின்று  போக்குவரத்தை சீரமைப்பதில்லை. மேலும், சாலை ஓரங்களில் வடிநீர் கால்வாய்  இல்லாததால் மழை காலங்களில் சாலையிலேயே தண்ணீர்  தேங்குகிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தண்ணீரில்  தத்தளித்தப்படி செல்கின்றனர். இச்சாலையில் அடிக்கடி ஏற்படும்  போக்குவரத்து நெரிசல் காரணமாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

Related Stories: