கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் பறிமுதல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் சிலர் விதிகளை மீறி கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்து பழங்களை விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது, கோயம்பேடு மார்க்கெட்டில் சோதனை நடத்தி கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கும் பழங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொண்ட 5 குழு கோயம்பேடு பழ மார்க்கெட்டில் நேற்று மதியம் 2 மணியளவில் தீவிர சோதனை செய்தனர். அப்போது, பல கடைகளில் எத்திலீன் பவுடர் மூலம் பழுக்க வைத்து பழங்களை விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து, கடைகளில் இருந்து சுமார் 4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கார்பைடு கற்கள் மூலம் பழங்களை பழுக்க வைக்க கூடாது என்று அறிவுறுத்தி வருகிறோம். எத்திலீன் பவுடரை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து தண்ணீரில் அமுக்கி பழங்களின் மீது நேரடியாக படாத வகையில் வைத்து பழுக்க வைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தோம். ஆனால், விதிமுறையை மீறி எத்திலீன் பவுடரை நேரடியாக பழங்களின் மீது வைத்து பழுக்க வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.தற்போது அதுபோல் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளோம். எத்திலீன் பவுடரை நேரடியாக தூவி பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதுபோன்று செய்யாமல் முறையாக பழங்களை பழுக்க வைக்க வேண்டும். இந்த கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெறும். விதிமுறை மீறி பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories: