பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி: ஆணையர் தகவல்

சென்னை: தடையை மீறி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து, பறிமுதல் செய்வது தொடர்பாக  அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு சென்னை மாநகராட்சியில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் 2ம் தேதி வரை அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 198 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் 3 மாதங்கள் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்களில் பிளாஸ்டிக் பை தவிர்க்கப்பட்டு துணி மற்றும் காகித பைகள் பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அதிகாரிகள் ஆய்வில் தொய்வு ஏற்பட்டதால், தடையை மீறி மீண்டும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில், ஆய்வின்போது பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளாக இருந்தால் அவற்றை உடனடியாக சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து சோதனையை மேலும் தீவிரப்படுத்த வார்டு அளவில் 200 குழுக்களை அமைக்க மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி ஒவ்வொரு வார்டிலும் சுகாதாரத்துறை, வருவாய்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் இணைந்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

அதன்படி கடந்த 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை 1126 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவில் 11 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிகாரிகள் சோதனைக்கு செல்லும்போது, இது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லை, மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்தான் என்று சில வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டுமா, கூடாதா என்ற குழப்பத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதற்கு தீர்வுகாணும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், எது தடை செய்யப்படாத பிளாஸ்டிக் என்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டவுடன் மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து இந்த பயிற்சி நடத்தப்படும். இதனை தொடர்ந்து வியாபாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இதன்பிறகும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு நோட்டீஸ் அளிக்கப்படும். மூன்று தடவைக்கு மேல் நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: