கும்பகோணம் வீரசைவ மடாதிபதியை கொலை செய்ய முயற்சியா ? போலீசில் புகாரளிக்க முடிவு

கும்பகோணம், மே 15: கும்பகோணம் வீரசைவ மடாதிபதியை கொலை செய்ய முயன்றதாக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளம் வடகரையில் வீரசைவ பெரியமடம், அதனுடன் இணைந்து வீரபத்திரர் கோயில் உள்ளது. வீரசைவ பெரிய மடத்தின் 97வது மடாதிபதியாக நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமி (71) உள்ளார். கடந்த ஜனவரி 29ம் தேதி ஹூப்ளி உள்ள சித்திரதுர்கா மடத்தை சேர்ந்த பசவமுருக சாரங்க சுவாமியை கும்பகோணம் வீரசைவ மடத்தின் மடாதிபதியாக சிலர் பதவியேற்க செய்தனர். அன்றிரவு பெரியமடத்துக்கு நீலகண்ட சுவாமி வந்தபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து ஆர்டிஓ வீராசாமி தலைமையில் பிப்ரவரி 3ம் தேதி முத்தரப்பு கூட்டம் நடந்தது. இதில் நீலகண்ட சுவாமி தொடர்ந்து நிர்வாகம் செய்யலாம். புதிதாக வந்தவர்கள் கோர்ட் மூலம் தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டார். இதற்கிடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை கங்காதர சுவாமி என்பவர் இளவரசு பட்டம் என அறிவிக்கப்பட்டு நீலகண்ட சுவாமியுடன் சேர்ந்து நிர்வாகத்தை கவனித்து வந்தார்.

Advertising
Advertising

அதே காலகட்டத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவர் மடத்தை விட்டு தலைமறைவானார். இந்நிலையில் மீண்டும் கங்காதர சுவாமி, கும்பகோணம் மடத்துக்கு வந்து நீலகண்ட சுவாமியுடன் சேர்ந்து கொண்டார். இந்நிலையில் வீரசைவ பெரியமடத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நீலகண்ட சுவாமி தலைமை வகித்தார். இதில் நீலகண்ட சுவாமியை தலைவராக கொண்டு 20 பேர் கொண்ட புதிய நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. அப்போது கங்காதர சுவாமியை மடத்திலிருந்து நிரந்தரமாக நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வீரசைவ மடத்தின் பக்தர் ஒருவர் கூறுகையில், பெங்களூரிலுள்ள வீரசைவ மடத்தின் சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்பதற்காக போலி சாமியாரையும், சிஷ்யனையும் உருவாக்கி வந்து மடாதிபதியாக்கினார். அப்போது ஏற்பட்ட மோதலில் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டன. ஆனால் அந்த போலி சாமியார்களை உள்ளே கொண்டு வந்தது கங்காதரன் தான் என்பது தெரியவந்துள்ளது.

கங்காதரன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தலைமறைவானார். அதன்பிறகு நீலகண்டனும், கங்காதரனும் மாறி மாறி புகார் தெரிவித்து கொண்டனர். பின்னர் கங்காதரன் சிஷ்யனாக இருக்கிறேன் என நீலகண்ட சுவாமியை ஏமாற்றி உள்ளே வந்தது வீரசைவ மடத்தை அபகரிக்க தான் என தெரியவந்ததால் அவரை மடத்தை விட்டு நீக்கியுள்ளார். மேலும் கங்காதரன், பெங்களூரு வங்கியில் உள்ள மடத்தின்  பணத்தை கையெழுத்திட்டு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பெங்களூரு காவல் நிலையத்தில் புகாரளிக்க நீலகண்ட சுவாமி சென்றுள்ளார். கும்பகோணத்தில் உள்ள வீரசைவ மடத்தையும், அதன் சொத்துகளை அபகரிக்கவும், நீலகண்ட சுவாமியை கொலை முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. பெங்களூரில் இருந்து நீலகண்ட சுவாமி வந்தவுடன், கும்பகோணம் காவல் நிலையத்தில் கங்காதரன் மீது புகார் அளிக்கவுள்ளார். கும்பகோணம் வீரசைவ மடத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பெங்களூரு வங்கியில் உள்ள ரூ.120 கோடி தான் காரணம்  என்றார்.

Related Stories: