திருக்காட்டுப்பள்ளி பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி\

திருக்காட்டுப்பள்ளி, மே 15: திருக்காட்டுப்பள்ளி அடுத்த பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி நடந்தது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை நவநாட்கள் பூஜைகளை அருட்தந்தையர் நிறைவேற்றினர். நேற்று மாலை 6 மணிக்கு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி திருவிழா கூட்டு திருப்பலியை நடத்தினார். இதையடுதுது கோயிலின் முன்னால் மல்லிகை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் “பூண்டி மாதா” சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. பூண்டி அன்னையின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதப்படுத்தி துவக்கி வைத்தார். இதையடுத்து தேர்பவனி நடந்தது. விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Advertising
Advertising

தேர்பவனியில் குடந்தை மறைமாவட்ட முன்மைகுரு அமிர்தசாமி, மைக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு அந்தோணி ஜோசப், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குதந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டி மாதா தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி தந்தைகள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மிக தந்தைகள் அருளானந்தம், இருதயம் அருள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தேர்பவனியையொட்டி  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று காலை 6 மணிக்கு ஆயர் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் சுற்றுவட்ட பங்கு குருமார்கள், இறைமக்கள் பங்கேற்கின்றனர். மாலையில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

Related Stories: