தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வேன், பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை, மே 15: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதுகாப்பு கருதி பள்ளி வேன், பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 15 வாகனங்களில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பு விதிகளின்படி பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று நடந்தது. இந்த ஆய்வை கலெக்டர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து 252 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பள்ளி வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, இருக்கைகள், வாகனத்தின் வேக அளவு, ஓட்டுநர் உரிமம் அனுபவம் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் 15 வாகனங்கள் குறைபாடுகளுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவற்றுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு குறைகளை சரி செய்து மீண்டும் காண்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது என்பது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன் விளக்கம் அளித்தார். மேலும் சாலை விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்வது குறித்து 108 ஆம்புலன்ஸ் சார்பில் விஜய்பாஸ்கர் விளக்கம் அளித்தார். அனைத்து டிரைவர்களுக்கும் சாலை விதிகளை மதித்து செயல்படவும், விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கவும் துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது எஸ்பி மகேஸ்வரன், முதன்மை கல்வி அலுவலர் சாந்தா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நெடுஞ்செழிய பாண்டியன், குண்டுமணி உடனிருந்தனர்.

Related Stories:

>