செடி மரங்கள் காய்ந்து வருகிறது போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கும் குடந்தை புதிய நகர பேருந்து நிலையம் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்படுமா?

கும்பகோணம், மே 15: கும்பகோணம் புதிய நகர பேருந்து நிலையத்தில் போதுமான பராமரிப்பு இல்லாததால் செடி, மரங்கள் காய்ந்து வருகிறது. குடிநீர் தொட்டி சுகாதாரமின்றி காணப்படுகிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து பராமரிப்பு செய்து சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் புதிய நகர பேருந்து நிலையம் அதிநவீன முறையில் 2014ம் ஆண்டு திறக்கப்பட்டது. அங்கு டிஜிட்டல் போர்டு, பேருந்துகள் வந்து செல்லும் நேரங்கள், ஊர்கள், குடிநீர், மின்விசிறி, நாற்காலி, அழகு செடிகள், வண்ண பூ செடிகள் அமைத்திருந்தனர். மேலும் இரவு நேரத்தில் பேருந்துகளை தவிர வேறு எந்த வாகனமும் உள்ளே செல்லக்கூடாது என்று பாதுகாவலர் பணியமர்த்தி பாதுகாக்கப்பட்டது. தற்போது போதுமான பராமரிப்பு இல்லாததால் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அவல நிலையில் காட்சியளிக்கிறது. கோடை காலத்தையொட்டி தண்ணீர் பாய்ச்சாததால் நகர பேருந்து நிலையத்தின் நடுவில் உள்ள அழகு செடிகள், குரோட்டன்ஸ்கள், மரங்கள் கருகி வருகிறது. காய்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தாமல் குப்பை போல் வைத்துள்ளனர்.  இதேபோல் பயணிகளுக்காக வைத்துள்ள குழாயில் குடிநீர் வருவதில்லை. மேலும் சுகாதாரமில்லாமல் உள்ளது. அதில் பாசிகள் படர்ந்துள்ளது. குடிநீர் குழாய் தொட்டியில் தண்ணீர் பல நாட்களாக தேங்கி கழிவுநீராக இருப்பதால் அதிலிருந்து கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது.

Advertising
Advertising

எனவே கும்பகோணம் புதிய நகர பேருந்து நிலையத்தில் உள்ள செடிகள், மரங்களை தண்ணீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும். பயணிகளுக்கு தேவையான குடிநீரை தரமானதாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், இந்த பேருந்து நிலையம் திறந்தபோது இருந்த பராமரிப்பு தற்போது இல்லை. கடமைக்காக தான் பணிகள் நடந்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அனைத்தும் காட்சி பொருளாக மாறிவிட்டது. தற்போது போதுமான ஆட்கள் பற்றாக்குறையால் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள செடி மற்றும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் செடி, மரங்கள் காய்ந்து கருகி வருகிறது. தண்ணீர் பாய்ச்சினால் தான் செடி, மரங்களை காப்பாற்ற முடியும். மேலும் குடிநீர் குழாய் தொட்டியை சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் நகாரட்சி நிர்வாகம், கும்பகோணம் புதிய நகர பேருந்து நிலையத்தை கண்டுகொள்ளாததால் தற்போது அவலநிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே கும்பகோணம் புதிய நகர பேருந்து நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தண்ணீர் பாய்ச்சி காய்ந்து வரும் செடி, மரங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: