×

ஆர்டிஓ நடத்திய வாகன ஆய்வில் 58 தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு

திருச்செங்கோடு, மே 15: மல்லசமுத்திரத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 58 தனியார் பள்ளி வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டது. தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் சென்று படிக்கும் குழந்தைகள் பாதுகாப்புடன் சென்று வர பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவை முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக போக்குவரத்துதுறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆண்டுதோறும் தணிக்கை  செய்யப்படுகிறது.

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட மல்லசமுத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், தனியார் பள்ளிகளின் வாகனங்களை, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, தனியார் பள்ளி வாகனங்களின் தரம், பிரேக், முதலுதவி பெட்டி, அவசரகால வழி, பிளாட்பாரம், புட்போர்டு, டயர்கள், சீட்டுகள், தீயணைப்பு கருவிகள் நல்லமுறையில் உள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவி இயங்குகிறதா உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், வாகன டிரைவரின் லைசென்ஸ், வாகன சான்று, வாகன காப்பீடு நடப்பில் உள்ளதா என 19 அம்சங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு வாகனமாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருச்செங்கோடு கோட்டத்தில் 620 பள்ளி வாகனங்கள் உள்ளது. இதில், இரண்டாம் கட்ட ஆய்வின்போது 231 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட இருந்தது. அதில் 191 வாகனங்கள் பங்கேற்றது. அவசர கால கதவு இல்லாதது வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு சாதனங்கள் இல்லாதது போன்ற குறைபாடுகள் காரணமாக 58 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டது. தகுதி இழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து, இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, குணசேகரன் உள்ளிட்டோர் வாகன ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வின்போது தனியார் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கண்பரிசோதனை முகாம் நடந்தது. தொடர்ந்து, வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை அணைப்பது குறித்து  திருச்செங்கோடு தீயணைப்புதுறை சார்பில், செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது.  வரும் 15ம் தேதி மூன்றாம் கட்ட ஆய்வு குமாரபாளையம் எக்சல் கல்லூரியில் நடக்கிறது.

Tags : Private School ,RDO ,
× RELATED மயிலாடுதுறை அருகே செம்மங்குளம்...