×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி பஸ்கள் ஆய்வு

கிருஷ்ணகிரி, மே 15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (14ம் தேதி) நடந்த பள்ளி, கல்லூரி வாகன தணிக்கையின் போது 17 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 732 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்களை தணிக்கை செய்யும் பணி 4 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது. முதற்கட்டமாக நேற்று கிருஷ்ணகிரி ஆயுதபடை காவல் மைதான வளாகத்தில் பள்ளி வாகன சிறப்பு விதி 2012ன்படி, வருடாந்திர வாகன தணிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், வாகன ஆய்வு குழுவினர் நேரில் பார்வையிட்டு தணிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் 732 உள்ளன. இம்மாதம் (மே மாதம்) இறுதி வரை நான்கு கட்டங்களாக வாகனங்களின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களான முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, படிகட்டுகளின் அளவு, அவசர கால வழி, ஓட்டுநர் இருக்கை, மோட்டார் வாகன விதிகள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி, தொலைபேசி எண்கள், பள்ளியின் பெயர், காவல்துறை, தீயணைப்புத்துறை தொடர்பு எண்கள், வாகனத்தை சுற்றி பாதுகாப்பு வளையம், மாணவ, மாணவியர்கள் இருக்கை போன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 238 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 17 வாகனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் போது பள்ளி நிர்வாகத்திடம் உடனடியாக தகவல் தெரிவித்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வாகன ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த தணிக்கையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கர்ராஜ், பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன், தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : school ,Krishnagiri district ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...