×

தர்மபுரி நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் பணியில் ஒரு வேட்பாளருக்கு 96 முகவர்

தர்மபுரி, மே 15: தர்மபுரி நாடாளுமன்றம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் பணியில் ஒரு வேட்பாளருக்கு 92 முதல் அதிக பட்சம் 96 முகவர்கள் வரை நியமித்துக்கொள்ளலாம். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இதில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர் 6சட்டமன்ற தொகுதிகளிலும், 6,07,597 ஆண்களும், 5,86,807 பெண்களும், திருநங்கைகள் 39 பேர் என மொத்தம் 11,94,443 பேர் வாக்களித்தனர். 80.49 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.

பதிவாக வாக்குகள் எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜை போடப்பட்டுள்ளது. இதுதவிர தபால் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மேஜையும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ஒரு மேஜை என மொத்தம் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்களும், அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒரு எம்பி தொகுதி, 2 எம்எல்ஏ இடைத்தேர்தல் தொகுதி என மொத்தம் 35 பேர் களத்தில் உள்ளனர்.  

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு (ஒருவேட்பாளருக்கு) 16 முகவர்கள் தேவை. 6சட்டமன்ற தொகுதிக்கும் (நாடாளுமன்ற தொகுதி) சேர்த்தால் மொத்தம் 96 முகவர்கள் தேவை. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல் தொகுதியையும் சேர்த்தால் 32 முகவர்கள் கூடுதலாக தேவை. 35 வேட்பாளர்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,480 முகவர்கள் தேவைப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் முகவர்கள் குறித்து வேட்பாளர்கள் கூறுகையில்,  தர்மபுரி மாவட்டத்தில் ஒரு எம்பி தொகுதி, 2 எம்எல்ஏ இடைத்தேர்தல் களத்தில் 35 வேட்பாளர்கள் உள்ளனர்.

இதில் ஒரு வேட்பாளருக்கு 92 முதல் 96 முகவர்கள் தேவைப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கையை நேரில் காண வேண்டும் என்பதற்காவும், புதிய அனுபவம் கிடைக்கும் என்பதற்காகவும், முகவர்களாக செயல்பட அனுமதி கேட்டுள்ளனர். பொறியியல் படித்த மாணவர்களும், இளைஞர்களும் முகவர்களாக செயல்பட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரு மேஜைக்கு ஒருவர் வீதம் 14 மேஜைக்கு 14 முகவர்களும், தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு வேட்பாளர் அல்லது அவரது தலைமை முகவர், தபால் வாக்கு மேஜைக்கு ஒரு முகவர் என ஒரு வேட்பாளருக்கு அதிகபட்சமாக 16 முகவர்கள் (வேட்பாளர் உள்பட) மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முகவர்களை நியமிக்கக் கோரி முகவர்களின் 2 புகைப்படத்துடன் உரிய படிவத்தை தொகுதி தேர்தல் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேட்பாளர் அல்லாத எவரும், எம்எல்ஏ., எம்பி., அமைச்சர் யாரும் வாக்கு எண்ணிக்கை அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவர்கள் வேட்பாளர்களின் முகவர்களாகவும் நியமிக்கப்பட மாட்டார்கள்.

எந்தெந்த மேஜைக்கு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர்கள் யார் என்பது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி வாரியாக, மேஜைகளுக்கு நியமிக்கப்படுவார்கள். ஒரு மேஜைக்கு தலா ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் வீதம் 3 அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும். மேஜைக்கு அருகில் வேட்பாளர், அவரது முதன்மைத் தேர்தல் முகவர், வாக்கு எண்ணிக்கை முகவர் மூவரில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும்.

வேட்பாளர், அல்லது அவரது முதன்மை தேர்தல் முகவர், அறையின் அனைத்து பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவர். ஒரே சமயத்தில் இருவரில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை பெற்ற அனைத்து முகவர்களும் காலை 7.30 மணிக்குள் அவரவருக்கான மேஜைக்கு அருகில் அமர்ந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட மேஜையைத் தவிர வேறு எந்த மேஜைக்கும் சென்று வாக்கு எண்ணிக்கையை கவனிக்கக் கூடாது. தபால் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் 8.30 மணியளவில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றனர்.

Tags : candidate ,Dhammapari ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...