அடிப்படை வசதியில்லாத மீன் மார்க்கெட்

புதுச்சேரி, மே 14: முருங்கப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு மீன் விற்பனை செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முருங்கப்பாக்கத்தில் புதுச்சேரி நகராட்சி கட்டுப்பாட்டில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட பெண்கள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். தினமும் முருங்கப்பாக்கம், கணபதி நகர், பாப்பன்சாவடி, சுதானா நகர், நயினார் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்த மீன் மார்க்கெட்டில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மீன் விற்பனை செய்யும் பெண்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 மேலும், மார்க்கெட்டை மூடிவிட்டு செல்வதற்கு வசதியில்லாதால் எப்போதும் திறந்த நிலையில் இருக்கிறது. இந்நிலையில் மீனவ பெண்கள் மீன் விற்பனை செய்ததுபோக மீதியுள்ள மீன்களை ஐஸ் பெட்டில் வைத்துவிட்டு செல்கின்றனர். இங்கு மின் வசதியில்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வந்து ஐஸ் பெட்டில் உள்ள மீன்களை திருடி செல்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ பெண்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவ பெண்கள் புலம்புகின்றனர். ஒரே ஒரு முறை குடிநீர் வசதிக்காக மோட்டர் அமைத்து கொடுத்துள்ளனர். அதுவும் பழுதாகி நின்றுவிட்டது. அதன் பின்னர் மோட்டரை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த வசதியும் இல்லாததால் பல பெண்கள் மார்க்கெட்டுக்கு வெளியில் மீன் விற்பனை செய்யும் நிலை உள்ளது. மீன் மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நுழையாத வகையில் பூட்டிவிட்டு செல்வதற்கும், அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கும் புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ பெண்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: