நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருக்கோவிலூர், மே 14:  திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரி, குளம், குட்டை,  கசிவுநீர் குட்டைகள், பாசன வாய்க்கால்கள் ஆகியவை பொதுப்பணித்துறை மற்றும்  ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நீர்நிலைகள்  அனைத்தும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிப்பதுடன், பல ஆண்டுகளாக  தூர்வாரப்படாமலும், புதர்மண்டியும் கிடப்பதால் நீர்பிடிப்பு இல்லாமல்  போனது. மேலும், தண்ணீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் குடியிருப்பு  பகுதிகளுக்குள் சென்று விடுகிறது.

இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில்  மழை காலங்களிலும், தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும்  சமயங்களிலும் அந்த தண்ணீரை சேமிக்க முடியாமல் அவை வீணாக கடலில் கலப்பதுடன்  வயல்வெளி அல்லாத பகுதிகளுக்கு சென்று விடுகிறது.

இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லாமல் போகிறது. அதோடு நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்து  அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் இப்பகுதியில்  நிலத்தடி நீரை நம்பி இருக்கும் பாசன பகுதிகள் அனைத்தும் வறண்டு போனதுடன்,  குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது.  வரலாறு காணாத அளவிற்கு இரண்டு  ஆண்டுகளாக நீர்நிலைகள் நிரம்பாததால் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு  சென்று விட்டது. இதனால் ஒருபக்கம் விவசாயம் பொய்த்து விட்டது. மற்றொரு பக்கம்  குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் மேய்வதற்கு புல்கூட  முளைக்காத அளவிற்கு விளைநிலங்களும், நீர்பிடிப்பு பகுதிகளும் வறண்டு  விட்டது.

இதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அதிக விலைக்கு மாட்டுத்தீவனங்கள், வைக்கோல்  ஆகியவற்றை வாங்கி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே திருக்கோவிலூர் மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பருவமழை  தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு  தூர்வாரி செப்பனிட சம்பந்தப்பட்ட பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை  அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: