அடுத்தடுத்து 5 பைக் திருட்டு வாகன ஓட்டிகள் அச்சம்

உளுந்தூர்பேட்டை,  மே 14: உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட  பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து  திருடு போனதால் வாகன ஓட்டுனர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை  அருகே கெடிலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் சம்பவத்தன்று தனது  இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் முன்பு நிறுத்தி  வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த போது  காணவில்லை. இதே போல் களத்தூர்  கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(43) பஞ்சாயத்து கிளார்க்கான இவர்  சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டை உழவர் சந்தை அருகில் தனது பைக்கை நிறுத்தி  வைத்து இருந்தார். கடைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்த போது  பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர்  அருண்குமார்(21), மாரனோடை கிராமத்தை சேர்ந்த சின்னராஜ்(37), திருக்கோவிலூர்  அருகே மேலதாழனூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கர்(36) ஆகிய 3 பேரும்  சம்பவத்தன்று கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு சென்று இருந்தனர். கோயில்  அருகில் உள்ள குளக்கரையில் தனது பைக்குகளை நிறுத்தி வைத்து இருந்தனர்.  கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வந்து பார்த்த போது பைக்குகளை காணவில்லை.  ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 பைக்குகள் அடுத்தடுத்து திருடு போன சம்பவம்  குறித்து உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் காவல்நிலையத்தில் 5 பேரும்  தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகோபால்  மற்றும் சவுகத்அலி ஆகியோர் வழக்கு பதிந்து பைக்குகளை திருடிய  காட்டுப்பையூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜயகுமார்(22),  புதுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் பரமசிவம்(27) ஆகியோரை தேடிவருகின்றனர். உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் காவல்நிலையத்திற்கு  உட்பட்ட பகுதியில் 5 இருசக்கர வாகனங்கள் திருடு போன சம்பவம் வாகன  ஓட்டுனர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: