அமெரிக்க டாலர் எனக்கூறி வெற்று பேப்பரை கொடுத்து ரூ.1.5 லட்சம் நூதன மோசடி: மர்ம நபருக்கு வலை

துரைப்பாக்கம், மே 14: சென்னை அடுத்த பனையூரை சேர்ந்தவர் ரியாஸ் (42). கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது கடையில் ஜெராக்ஸ் எடுக்க ஒருவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது, ரியாஸிடம் பேச்சு கொடுத்து, பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார்.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கடைக்கு வந்த அந்த நபர், ‘என்னிடம் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம். தற்போது, நான் கஷ்டத்தில் உள்ளேன். அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் ரூ.3 லட்சம் டாலரை, யாரிடமாவது ரூ.1.5 லட்சத்திற்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள்,’ என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதற்கு, ரியாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர், ‘என் குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்கள் இப்பகுதியில் உள்ளனர். அதனால் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்து டாலரை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்ற கூறிவிட்டு பைக்கில் சென்றார். அதன்படி, அங்கு பைக்கில் வந்த ரியாஸிடம், ஒரு பையை கொடுத்து, இதில் அமெரிக்க டாலர்கள் உள்ளது, என்றார். பின்னர், ரியாஸிடம் இருந்து ரூ.1.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார். ரியாஸ் வீட்டிற்கு வந்து, அந்த பையை திறந்து பார்த்தபோது, டாலருக்கு பதில் வெற்று பேப்பர் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக, பணத்தை பெற்றுச் சென்ற நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசில் ரியாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: