வில்லங்க சான்று வழங்க ரூ.500 லஞ்சம் இளநிலை உதவியாளருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை, மே 14: வில்லங்க சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருத்தணி அடுத்த பாலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (50). இவர், தனக்கு சொந்தமான நிலத்துக்கு வில்லங்க சான்று பெற ஆர்.கே.பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார்.

தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகம் சென்று, சான்றிதழ் வழங்கும் பிரிவில் இளநிலை உதவியாளராக பணியில் இருந்த பன்னீர்செல்வம் (55) என்பவரிடம் வில்லங்க சான்றிதழ் கேட்டார். அதற்கு, ரூ.500 லஞ்சம் கொடுத்தால் தான், வில்லங்க சான்று வழங்குவேன் என அவர் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலு, இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையிலான போலீசார், ரசாயானம் தடவிய ரூ.500 பணத்தை வேலுவிடம் கொடுத்து அனுப்பினர்.

அவர், அந்த பணத்தை இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வத்திடம், கொடுத்துவிட்டு வில்லங்க சான்றிதழ் பெறும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணை திருவள்ளூர் முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி மணி முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி மணி நேற்று தீர்ப்பு அளித்தார்.

அதில், வில்லங்க சான்று வழங்க லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக பன்னீர்செல்வத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் என, மொத்தம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

Related Stories: