2 மாதமாக பூட்டிக் கிடக்கும் புலவனூர் சமுதாய நலக்கூடம்

கடையம், ஏப். 26: கடையம் அருகே புலவனூரில் 2 மாதங்களாக சமுதாய நலக்கூடம் பூட்டி கிடப்பதால் விஷேச நாட்களில் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடையம் யூனியன் கீழக்கடையம் ஊராட்சிக்கு உட்பட்டது புலவனூர் கிராமம். இங்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொன்மலை நகரில் அம்பை சட்மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்டம் 2004-05ம் ஆண்டு ரூ.4.5 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தை புலவனூர், பொன்மலை நகரை சேர்ந்த மக்கள், தங்கள் வீட்டு விஷேச நிகழ்ச்சிகளை நடத்தி பயன்பெற்று வந்தனர்.

2013-14ம் ஆண்டு ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடத்தில் புதுப்பித்தல் பணி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் இந்த சமுதாய நலக்கூடத்தில் தண்ணீர் மற்றும் மின் வசதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த பொதுமக்கள் சென்று கேட்ட போது மண்டபத்தில் புதிதாக தண்ணீர் வசதி, மின் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாடகை பணம் கூடுதலாக வசூலிக்க வேண்டும் அதற்கு கூட்டம் போட்டு தீர்மானம் வைக்க வேண்டும் என அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதற்கு முன் வாடகை கட்டணம் ரூ.500 வசூல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

தற்போது சமுதாய நலக்கூடம் பூட்டிக் கிடப்பதால், நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு சமுதாய நலக்கூடம் கட்டிய நோக்கமே ஏழை மக்களும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை மண்டபத்தில் வைத்து பயன்பெற வேண்டும் என்பதுதான். ஆனால் 2 மாதங்களாக இந்த சமுதாய நலக் கூடம் பூட்டியே கிடப்பது கிராம மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Related Stories: